குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

”வீதி திரு வீதியாகக் காட்சியளிக்கிறது,” ”அடியார்கள் திருவீதியை மெழுகிட அழைக்கப்படுகின்றீர்கள்”, ”அம்பாள் மரகத வண்ணமயூரமாக….”.அன்னைபராசக்திக்கு அரோகரா”. இவ் வசன நடைகளை நாம் எமது கிராமத்தில் அம்பிகையின் திருவிழாக்காலத்தில் கேட்டிருக்கின்றோம்.

இந்தக்கணீர் என்றகுரல் எம்மை விட்டு பிரிந்து சுமார் 20 வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்குரலுக்குரியவர் எமது நெஞ்சங்களிலே இன்றும் வாழ்கின்றார். அவர்தான் ஆசிரியர் உயர்திரு. இராசரத்தினம் அவர்கள். 

இவர் ஒரு இளைப்பாறிய பாடசாலை அதிபர். தன் நாவன்மையினால் எம் கிராம மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்ட இப் பெருந்தகை சொல்லில் எவ்வளவு தூய்மையைக் கொண்டிருந்தாரோ அதே அளவு தூய்மையை தன் உடையிலும் கொண்டிருந்தார். 

எங்கள் ஊரில் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவிக்கவும், அறிவுப்பசியைப் போக்கவும் புற்றீசலாகபிறப்பெடுத்த பல வாசிகசாலைகளிலே மிகவும் பழமை வாய்ந்ததாகவும், எல்லாவற்றுக்கும் தாய் சங்கமாகவும் திகழ்ந்தது சன்மார்க்க சபையே ஆகும். அந்த சபையின் ஒரு காவல்தெய்வமாகத் திகழ்ந்தவர் திரு. இராசரத்தினம் அவர்கள். 

காலையில் தனது கடமைக்கு செல்ல முன் சன்மார்க்க சபையின் கதவுகள் திறந்து, அங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்து பின் மாலை வேளையில் சபையின் கதவுகள் பூட்டிய பின்னரே உறக்கத்துக்கு செல்லும் அவர் தனது கடமைகளில் ஒன்றாகவே அதனை செய்து வந்தவர். 

தன் உடமைகளிலும் மேலாக சபையின் சொத்துக்களை கண்ணெனக்காத்தவர். எங்கள் கிராமத்திற்கு அபாயம் வருகிறது என மக்கள் இடம் பெயர்ந்த போது முதலில் சன்மார்கசபையின் நூல்களை வேறு இடத்திற்கு மாற்ற இவர் காட்டிய ஆர்வம் இதனைப் புரிய வைத்தது. தான் யாரிடமாவது உதவி பெற்றால் அந்த நன்றியை என்றுமே மறக்காத பெரும் பண்பாளர். 

      மிகவும் இனிமையாக உரையாடும் இவரிடம் எப்போதும் அமைதியே குடிகொண்டிருக்கும். மற்றவர் மனம் நோக ஒருவார்த்தை கூடபேசாதவர். அன்னை முத்துமாரியிடம் மிகுந்த பக்திகொண்ட இப் பெருமனிதர், ஆலயங்களில் தொண்டர்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் முன்நிற்பவர்.

அகிம்சைவழி நடந்து மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக வாழ்ந்த இவர் ஒரு முறை எங்கள் கிராமத்தில் திருட்டுக்கள் அதிகரித்து மக்கள் பீதியுடன் இரவைக்களித்தபோது வீதியில் இறங்கி மக்களைத்திரட்டி மறியல் செய்தவர். இவர் எங்களை விட்டு மறைந்தாலும் ஊருடன் இரண்டறக்கலந்து விட்ட இம்மனிதர் என்றும் குரும்பசிட்டி மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்.


 - ஆக்கம் :- மகேசன்மைந்தன் -