குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
இளையதம்பி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் முது மொழிக்கு அமைய திக்கெல்லாம் பரந்துவாழும் எமது வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 50 வருடங்களின் முன்பே தமிழர் தரணியெங்கும் இடம் பெயர்ந்து தங்கள் திறமைகளைக்காட்ட எங்கள் ஊரில் இருந்தும் புறப்பட்டனர்.

அவ்வழியில் மலேசிய நாட்டில் குடிபெயர்ந்து அந்நாட்டின் புகையிரத இலாகாவில் பணிபுரிந்த பின் தாய்நாடு திரும்பியவர்களில் மாப்பாணர் இளையதம்பி அவர்கள் குரும்பசிட்டி மக்களின் தந்தையாக என்றும் மதிக்கப்பட்டவர். அவர் அதே மரியாதையை அயல் கிராம மக்களிடம் இருந்தும் பெற்ற ஒரு பெருமகன் ஆவர்.

 

மலேசியா நாட்டில் வசித்த போது இரண்டாம் உலகமாகயுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர் அதன் வடுக்களைச் சுமந்தவாறே ஊர் திரும்பியபின் தாய்மண்ணிலும் யுத்தம் வெடித்து குண்டு மழை பொளிந்தபோது அயலவருக்கு அடைக்கலமாக தான் வசித்த வீட்டின் சீமெந்துக் கூரை அறைகளை அபயமாக அளித்து பயத்தால் பதுங்கி இருந்த பிஞ்சுகளுடன் தான் கண்ட யுத்தத்தின் கொடுமைமைகளைப் பகிர்ந்து கொண்டவர்.

எங்கள் கிராம மக்களுக்கு இவர் புகையிரத இலாகவில் இருந்து ஒய்வு பெற்றவர் என்பதிலும் பார்க்க வினைதீர்க்கும் குரும்பைநகர் சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் தர்மகார்த்தாகவே தெரிந்தார். தன் வாழ்க்கையின் அரைப்பங்கிலும் மேலாக இவர் ஆற்றிய சேவை சித்திவிநாயகரின் அறங்காக்கும் பணி என்றால் மிகையாகாது. 

ஆலயங்களின் பாதுகாப்பென்பது ஆண் வாரிசுகளின் கடமை என்னும் வழக்கப்படி சித்திவிநாயர் ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபின் அதன் நிர்வாகமே இவரின் உயிர்நாடியாக இருந்தது. இருமுறை விநாயகரின் குடமுழுக்கு இவர் காலத்தில் நடந்தது என்றால் அதற்கு இவர் தன் பிறப்பில் செய்த பூர்வ புண்ணியம் தான் காரணம் எனக் கூறலாம். தள்ளாதவயதிலும் இருமுறையும் அப் பெருவிழாவை திறம்பட நடாத்தி முடித்த பெருமையை 1984ம் ஆண்டு ஆவணி மாதம் 31ல் பெற்றிருந்தார். 

எமது ஊர் மக்களின் ஆதரவுடனேயே நடைபெற்ற இவ் ஆலய நிர்வாகப் பணிகள் எல்லாம் குறை எதுவும் நிகழாமல் நடக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவார். அனுபவ முதிர்;ச்சி கண்டு அடுத்வருக்கு ஆலோசனை கூறும் வயதிலும் மற்றவரிடம் கலந்தாலோசிக்காமல் எந்தக்காரியத்தையும் செய்ததில்லை. அதற்காக இவர் வயது வித்தியாசம் பார்த்ததே இல்லை, யாருக்கு என்ன துறையின் நுட்பம் நன்கு தெரியும் என்பதைக் கண்டறிந்து அவர்களை அழைத்தே தன் ஐயத்தை; தெளிவுபடுத்துவார். எவர் தன் பணியை “பரிபூரணமாக”ச் செய்வார்கள் என அறிந்து அவர்களிடமே அப் பணியை ஒப்படைத்து அது முடியும்வரை எந்தத் தலையீடும் காட்டாதவர். அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே அதுவாகும். அறங்காவல் பணிக்கு இவருடன் வாழ்நாள் முழுவதும் வலது கரமாகக் கூட இருந்தவர் எங்கள் ஊரின் இளைப்பாறிய அதிபர் திரு. கனகசுந்தரம் அவர்கள். கிழமையில் ஒரு முறையாவது மாலைவேளையில் அதிபருடன் கதைக்காது அவர் இரவு உணவை அருந்தியதே இல்லை. 

கொடுத்த வாக்கை எக்காரணம் கொண்டும் அவர் மாற்றியதே இல்லை. ஊர் மக்களால் மதிக்கப்பட்ட இந்த உன்னத மனிதர்;, கற்றவருக்கு தலைவணங்கும் நற்பண்பை தன் தலைமுறைக்கும் ஊட்டி வைத்தவர். பெரும்கவிஞர் கலாநிதி வி. கந்தவனம் அவர்களில்; மிகுந்த மதிப்பு உடையவராக இருந்தவர். இவரின் வேண்டுதலிலேயே புதிய பொன்னூஞ்சல் பாவை கவிஞர் விநாயகருக்கு விருந்தாகப்படைத்தார். கணபதிக்கு பணிசெய்ய கணேசரை நியமித்து ஆகமவிதிப்படி ஆலயப் பணிகளை சிறப்புற நாடாத்தியவர். நூறுமுகம் தோன்றிநாலும் ஆறுமுகம் போல்வருமா… என்பதை நன்கே தெரிந்துதான் “கிரியாவிபூதருடன்” கனிவான மொழி பேசி கணநாயகன் சேவை மேம்பட தன்பணியாற்றியவர்.

இவர் தன் தேவைக்காக வாழ்வில் தேடியதெல்லாம் இரண்டு இரத்தினங்கள், தனக்குத் துணையாக ஒர் இரத்தினத்தையும், கணநாதன் பாதத்தில் மலர்தூவ இன்னுமோர் இரத்தன(சாமி)ஐயாவையும் தேர்ந்தெடுத்தார், இவர்கள் இருவரும்தான் எவ் இடர் வரினும்; தம் பணியை இறுதிவரை தொடர்வார்கள் என்பதை என்றோ அறிந்து வைத்திருந்த தீர்க்கதரிசி ஆவார். அவரது கணக்குத் தப்பவே இல்லை. துணையானவர் அவரை வழியனுப்பும் வரை கூடவே இருந்தார், மற்றவரோ தனக்கு கிடைத்த விநாயகரின் பணியைத்தொடர வழிமேல் விழிவைதத்து இன்னும் காத்திருக்கின்றார். 

தனிப்பட்ட வாழ்வில் எளிமையுடன் சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர், ஆனால் அகிலாண்ட கோடி பிரமாண்டநாயகன் எங்கள் ஊர் ஜங்கரனின் அலங்கார நிகழ்வுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்தவர். இசையால் மயங்காதோர் இதயம் எது… என்பதற்கு அமைய உடலின் நாடி நாளத்திற்கெல்லாம் ஒய்வு கொடுக்கும் நாதஸ்வர இசைக்கும், (இதை இந்தியாவின் மறைந்த நரம்பியல் நிபுணர் வைத்திய கலாநிதி இராமமூர்த்தியே சொல்லி இருக்கிறார்) இறைவனேயே ஆடவைக்கும் தவில் மழைக்கும் இவர் கொடுத்த மதிப்பு அக்கலையின் வல்லுநர்களை இன்று கேட்டலும் தெரியும். இலங்கையின் புகழ்பூத்த நாதஸ்வர மேதை அளவையூர் சிதம்பரநாதன் இவர் அழைப்புக்கு எங்கு நின்றாலும் வந்து இசையால் குரல் கொடுத்தவர். ஒரு முறை இவரிடம் பணிசெய்தவர்கள் மறுமுறை தம்மை அழைக்கமாட்டாரா என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 

சொல்லில் நேர்மையும், தொழிலில் திறைமையும் இருக்க வேண்டும் என்பது தான் இவரின் தாரக மந்திரம். எக்காரியத்தை எடுத்தாலும் அதைத் திறமையாக நடாத்தி முடிக்க வேண்டும் எனத் தன் நேரம் முழுவதையும் செலவிடும் இவர் நேரத்தைப் பொன்னாகவே மதித்தவர். தன் நாளாந்த கருமங்கள் என்றாலும். ஆலய நிகழ்வுகள் என்றாலும் நேரம் தவறாது நடக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகவே இருந்தார். கடிகாரத்தை ஒரு நாளும் கையில் அணியாதவர் நேரத்தை மதித்ததுதான் இவரிடம் இருந்த திறமை. ஒருவரை ஒரு நேரத்துக்கு அழைத்தால் அவர் வரவை எதிர்பார்த்து பல மணி நேரமாகக் காத்திருப்பார். முன் அறிவிப்பு இன்றி அடுத்த வீட்டிற்குக் கூட செல்லாதவர். மற்றவருக்கு இடையூறு இன்;றி இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர். ஆங்கில மொழியில் திறமை பெற்று விளங்கிய இவர் ஆங்கிலேயரிடம் கற்க வேண்டிய நல்ல பண்புகளைக் கற்றிருந்தார் என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்லாமல் பலர் பின் பற்ற வேண்டிய பாடங்களாகவே அமைந்தது. 

ஆரம்பகாலங்களில் குரும்பசிட்டி உதயதாரகை மன்றத்தின் வளர்ச்சிப் பணிகளில் தன்பங்காற்றியவர், மயிலிட்டி கிராம சபையின் உறுப்பினராகத் தெரிவாகி எம் கிராமத்திற்குப் பணிசெய்தவர். ஒய்வு பெற்ற பின்பும் மலாயன் ஒய்வூதியர் சங்கம் நடாத்தும் கூட்டங்களிற்கு சென்று அவர்களிற்கு எல்லாம் தன் ஆதரவு வழங்கியவர். ஆலோசனை என யார்வரினும் தன் மனங்கோணாது உதவிபுரிந்தவர். 

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என, இவர் வாழ்வில் எந்த நோயும் இவரை அணுகியதே இல்லை சுகயீனம் என வைத்தியாசாலையின் வாசலுக்கே செல்லாதவர். அகவு 84 ஆகியும் சித்திவிநாயகருக்கு குடமுழுக்கு நடாத்த துடிப்புடன் நின்றவர். ஆலய நிர்வாகம் தன் பின்பும் குறையின்றித் தொடர ஆவன செய்து அந்தணர் வாழ்வுக்கு வழி அமைத்தவர். கணபதிக்கு குடமுழுக்கு நாடத்திய கணேசருக்கு பொன்னாடை போர்த்தி இசை முழங்க ஊர்வலமாக வழியனுப்பி வைத்த இந்த உயர்த உள்ளம், தான் மட்டும் கரம் பிடித்தவரே கடைசிவரை என வாழ்ந்து எவருக்கும் தெரியாமல் தன் வாழ்வை நிறைவு செய்தார். 

இல்லை…. 

அளித்துவிட்ட கோலங்களாக உருக்குலைந்து தெரியும் குரும்பைநகர் மண்ணில் இன்னும் சிறு புள்ளியாக ஒளிவீசும்; எங்கள் சித்தி விநாயகரின் சந்நிதியில் தனியே இருக்கும் கணபதிக்கு இவரும் துணையாக இருக்கிறார். 

அல்லது…

மண்வயல் செய்து தம் மைந்தரை எல்லாம் மேதைகளாக்கிய எம் மண்ணில் பிறந்தவர் இன்று செய்யும் “பொன்வயல்” தன்னில் தோற்றமளிக்கிறார்.

- கணேசர்:

(எங்கள் ஊர் விநாயகர் இன்புற தன் சேவை புரிந்த அயலூர் ஆகமத் தென்றல், விக்னராஜபூஜாதுரந்தரர் சிவத்திரு சிவபாதசுந்தரக் குருக்கள்)

-கிரியாவிபூதர்:

(ஆகமக்கியாவிபூதர் சிவத்திரு சிவ. ஆறுமுகக்குருக்கள்)

-இரத்தன(சாமி:

விநாயகப் பெருமானின் அர்ச்சகர் சிவத்திரு இரத்தினஐயா. இவர் பணிபுரிந்த காலமே விநாயர் ஆலயத்தின் பொற்காலம்.

நன்றி - குரும்பசிட்டி நலன்புரிசபை-கனடா, பொன்வயல்மலர்-2007, இணைப்பு . 17.09.2007 / 13:50