குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஈழத் தமிழகத்தின் வடபால், வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள குக்கிராமம் குரும்பசிட்டி. இன்று அரச உயர் பாதுகாப்பு வலயத்தனுள் அடங்கி அடக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்தின் அருமை பெருமைகளும் அதன் வீச்சின் பரிமாணமும் சொல்லி அமையத்தக்கதன்று.

தமிழ் இயல், இசை, நாடகம், அரசியல், கைத்தொழில், கமத்தொழில் என எல்லா வகையிலும் துறையிலும் சிறப்போடு செயற்பட்டு வந்த இக்கிராமத்து வளர்ச்சியில் உயர்ச்சியில் அக்கறை காட்டிய, அர்ப்பணிப்போடு செயற்பட்ட பல பெரியார்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் குறிப்பிட்டுப் பேசத்தக்க கனவான் க. திருநாவுக்கரசு அவர்களின் நினைவினை மீட்டுப்பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். 

இலங்கைத்தீவிலே அரசாங்க கல்விச் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் (1869) எமது கிராமங்களில் திண்ணைப் பள்ளிகளிலேயே மாணவர்கள் கல்விகற்றுவந்திருக்கிறார்கள். இக்காலப்பகுதியில் வாசுதேவ முதலியாரின் புதல்வாரன பரமானந்தச்சட்டம்பியார் (பெரியவாத்தியார் பரமானந்தர் வேறு) திண்ணைப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்குக் கல்வி போதித்து வந்துள்ளார். இவரது புதல்வரான கதிரிப்பிள்ளை, தமது துணைவியார் சின்னத்தங்கம் என்பவரோடு சேர்ந்தாற்றிய இல்லறத்தின் பயனாக வாய்த்த மூத்த புதல்வரே திரு. திருநாவுக்கரசு ஆவார்கள். இவருக்குப்பின்னால் சுந்தரமூர்த்தி, அருணாசலம் என இரு சகோதரர்கள்.

1904ல் பிறந்த திரு. திருநாவுக்கரசு அவர்கள் Tailor’s Collegeஇல் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றார். Junior Cambridgeவரை கல்விபயின்ற இவர் எமது கிராமத்திலிருந்து முதன்முதலாக புகையிரத நிலைய அதிபர் பதவிக்கு நியமனம் பெற்ற மூவருள் ஒருவராவர். திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் கந்தையா மகள் சிவபாக்கியம் என்பவரை 1926ல் திருமணம் செய்து இல்லறபந்தத்தில் நுழைந்தார். திருநாவுக்கரசு சிவபாக்கியம் தம்பதிகளின் இனிய இல்லறத்தில் சத்தியபாமா, சத்தியதேவி, ஆகிய புதல்விகளும் சிவராசா (பாபு) எனும் புதல்வரும் வாய்த்தனர்.

திருநாவுக்கரசு அவர்களின் தந்தையாரான கதிரிப்பிள்ளையின் சகோதரர் நாகமுத்துவின் மைந்தரே ஈழகேசரி பொன்னையா ஆவார். ஆக 1892ல் பிறந்த பொன்னையா அவர்களும் 1904ல் பிறந்த திருநாவுக்கரசு அவர்களும் ஒன்றுவிட்ட சகோதரர்களாவர்.

குரும்பசிட்டிக் கிராமத்துப் பொதுப்பணி மன்றங்களுக்கெல்லாம் முதலிலே, ‘இந்து வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பு ‘பெரியவாத்தியார்’ பரமானந்தர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தோற்றம் பெற்ற சில அமைப்புகளில் ‘சனோபகா சபை’ என்ற அமைப்பே 1934 ஐப்பசியில் ‘சன்மார்க்க சபை’ என்ற பெயருடன் இயங்க ஆரம்பித்தது. சன்மார்க்க சபையை ஈழகேசரி பொன்னையா அவர்கள், 1934ல் ‘விஐய தசமி’ தினத்தில் அங்குராப்பணம் செய்து அவரே ஏறத்தாள 15 ஆண்டுகளாகத் தலைமைதாங்கி திறம்படச் செயலாற்ற வழிவகுத்தார்.

1948ல் கிராமிய மட்டத்தில் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, கிராமங்கள் தோறும் கிராம அபிவிருததிச்சங்கங்கள் செயற்பட ஆரம்பித்தன. எமது கிராமத்திலும் இதே ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட ‘கிராம அபிவிருத்திச்சங்கம்’ சன்மார்க்க சபையின் உப பிரிவாகச் செயற்பட்டுவந்தது.

ஆறுமுகநாவலர் அவர்களின் சமயக்கோட்பாடுகளையும், ஒழுங்கு, பழமை பேணுதல் போன்ற நெறிமுறைகளையும் பின் பற்றிய பெரியவாத்தியார் பரமானந்தரிடம் கல்விபயின்று ஆசிரியத்தொழிலுக்கு வந்தவர்களும், தேசியவாதியும் சீர்திருத்தவாதியுமான ஈழகேசரி பொன்னையா அவர்களின் முற்போக்குச்சிந்தனைகளை ஆதரிப்பவர்களும் சன்மார்க்க சபையிலும் கிராம அபிவிருத்திச்சங்கத்திலும் சேர்ந்து பணியாற்றினர். 1951ல் ஈழகேசரி பொன்னையா அவர்கள் காலமாகியதைத் தொடர்ந்து இவ்விரு குழாம்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயற்படுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

1957ல் கிராம அபிவிருத்திச்சங்கம் தனித்து இயங்கும் தீர்மானத்தை மேற்கொண்டதை அடுத்து, மேற்படி சங்கம் எமது கிராமத்தின் மேற்குப்புறத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செயற்பட ஆரம்பித்தது. பண்டிதர். வ. நடராசா, சி. கனகசுந்தரம் ஆசிரியர், சீ. வைத்திலிங்கம் ஆசிரியர், வ. கந்தையா ஆசிரியர், கு. செல்லத்துரை, மா. இளையதம்பி ஆகியோர் மிகுந்த கரிசனையுடன் இது விடயத்தில் செயற்பட்டவர்களாவர்.

இந்த நேரத்தில் திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தோடு இணைந்து அதன் முதலாவது தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இவரது ஆற்றலும் ஆளுமையும் நிர்வாகத்திறனும் கிராம அபிவிருத்திச் சங்கம் தொடர்ச்சியாகப் பல பயனுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வழிகோலியது.

திரு. க. திருநாவுக்கரசு அவர்களின் தலைமைக் காலத்திலேயே அன்னாரின் அயராத முயற்சியால் எமது கிராமத்திற்கான 770ம் இலக்க பேரூந்துச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து முதலாவது பேரூந்து எமது கிராமத்திற்கு வந்த போது அன்னாரும் அதே பேரூந்தில் பிரயாணித்துவந்து எமது கிராமத்தில் இறங்கியது மிகவும் மனதைத்தொட்ட விடயமாகப் பலராரும் பேசப்பட்டது. விவசாயிகள், சிறுவிற்பனையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு, அவர்களது பொருட்களை சுலபமாகச் சந்தைப்படுத்துவதற்கும், கொள்வனவு செய்வதற்கும் அன்னாரின் முயற்சி பெரிதும் கைகொடுத்துதவியது.

திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் 1966இல் இவ்வுலக வாழ்வை விடுத்து இறையடி சேர்ந்த போதும், 770ம் இலக்கப்பேரூந்து, குரும்பசிட்டி கிராமமுன்னேற்றச் சங்கக் கட்டடம் போன்றன அன்னாரை என்றும் நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். அவரது காலத்துக் குரும்பசிட்டி மக்களும் அடுத்த பரம்பரையினரும் அன்னாரை நினைவுகூர்ந்தாலும், அவர்கள்தம் வழித்தோன்றல்களும்கூட அன்னாரை நினைவுகூருவது சாலச்சிறந்ததாகும். 

அன்னாரது மூத்த புதல்வியான திருமதி. சத்தியபாமா, பல்வேறு தொண்டு நிறுவனங்களில் தன்னை இணைத்துக்கொண்டு இன்னமும் இளம் யுவதிபோலச் சுறுசுறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். ஏங்கள் குரும்பசிட்டி நலன்புரிச் சபையின் தலைவியாக ஈராண்டுகாலம் செயற்பட்டவர். இவரது மகனான திரு. ஈஸ்வரகுமார் அவர்கள், ஊரில் குரும்பசிட்டி உதயதாரகை மன்றத்துடனும் பின்னர் கனடாவில் நலன்புரி சபையுடனும் மும்முரமாகத் தன்னை இணைத்துக்கொண்டவர். இச்சபையின் செயலாளராகவும் ஈராண்டுகாலம் அர்பணிப்போடு தன்னை ஈடுபடுத்திக்;கொண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியதொன்றாகும்.

கனவான் க. திருநாவுக்கரசு அவர்களின் தன்னலமற்ற தொண்டினை குரும்பசிட்டி மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூருவார்களாக.!

 

 ஆக்கம்: குரும்பசிட்டி ஐ.ஜெகதீஸ்வரன்