Print
Category: கிராமப்பெரியார்கள்
Hits: 2962

எங்கள் குரும்பசிட்டித் தாயானவள் பெற்றெடுத்த சற்புத்திரர்களுள் பேரோடும் புகழோடும் வாழ்ந்த சிறப்புக்குரியவர் முன்னாள் விதானையார், அமரர் கதிரேசு செல்லத்துரை அவர்களாவர். தான் பிறந்த கிராமம் விழிப்புணர்ச்சி பெறவும், சமயப்பற்று– அன்பு– பண்பாடுகளில் சிறப்புற்று விளங்கவும் செய்துகொள்ளவேண்டிய பலவற்றை புத்திசாதுரியத்துடன் செய்து முடித்தவர்.கிராம மக்கள் உடல்-உள-நல விருத்தியுடன் சீர் சிறப்பாக வாழவேண்டுமென்ற உயரிய நோக்கோடும்,இன்னும் கிராமத்தின் எதிர்கால வளர்ச்சியிலும் - அபிவிருத்தியிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்ட பண்பாளர்.

அன்பும் இரக்க சிந்தனையும் அவர் கூடப்பிறந்தவை. சகலரிடமும் சகோதர வாஞ்ஞையுடன் நட்புக்கொண்டு வாழ்ந்தவர்.

பிறர் இடர் களைந்தவர். உதவிகள் பல புரிந்தவர். ஏழைகளின் தோழனாக– கமக்காரர்களின் நண்பனாக– ஒடுக்கப்படுபவரின் துணைவனாக, இன்னும் சமயப்பற்றுள்ளவர்களின் அடியவராக ஊருக்கு உழைத்த செம்மல். தன்னைப் பகிரங்கப்படுத்தாமல் என்றும் அடக்கமாகவே வாழ்ந்தாராயினும், எங்கே நற்கருமங்கள் நடைபெற்றாலும் ஆதரவளித்து உற்சாகப்படுத்திய பெருமைக்குரியவர் எங்கள் விதானையார் அவர்கள். 

 திருவாளர் கதிரிப்பிள்ளை கதிரேசுவின் செல்வப் புதல்வரான இவர், குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையில் கல்விகற்று முதல் மாணவராகத் திகழ்ந்து எஸ்.எஸ்.சி சித்தியடைந்து சக மாணவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் தனது சேவை கலந்த அன்பால் நன்மதிப்பைப்பெற்று ஒரு மாணவர் தலைவராகத் தன்னை இனம் காட்டியவர். 
 
 தனது தந்தை மற்றும் மாமனார் தொண்டாற்றிவந்த அம்பாள் ஆலய மேற்பார்வையை மிகவும் நேர்த்தியாக ஆளுமையுடன் செய்தவர். அவரது அன்புக் கட்டளைகளை ஏற்றுப் பணிபுரிந்தவர்கள் பலராவர். சிவாச்சாரியார்களுடனான ஒத்துழைப்பினாலும், பக்தகோடிகளின் உதவிகளினாலும் வருடாந்தம் அறுபதுக்கு மேற்பட்ட திருவிழாக்களை நீண்ட பல காலங்களாக எவ்வத குறைவுமின்றி இனிதே நடாத்திக் காட்டியவர், பண்பாளர் செல்லத்துரை விதானையார் அவர்கள். 
 
 குரும்பசிட்டி மக்களும் அருகிலுள்ள ஊரவர்களும் ஒன்றாய்க்கூடி, ‘அன்னை பராசக்திக்கு அரோகரா’ என்று வானைப் பிளக்கப் பாராயணம் செய்யும் மாட்சி, எங்கள் அம்பாள் ஆலயத்தின் கண்கொள்ளாக் காட்சி. அப்பேர்ப்பட்ட ஆலயத்தை அறநெறிகள்கொண்டு பரிணமிக்கச் செய்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இப்பெருமகன் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆலய உள்வீதி, மூடிய கொட்டகை வேலை, சித்திர அலங்காரத் தேர், தேர் மண்டபம், அதிசிறந்த தூபி வேலைப்பாடமைந்த ஆலயப்புனரமைப்பு, கல்யாண மண்டபம், இன்னும் பல அமையக் கர்த்தாவாக இருந்தவர் இவராவர். மேலும், இராஜகோபுரம் அமைப்பது இன்றியமையாத சிவப்பணி என்பதையுணர்ந்து அதனை நிறைவேற்ற விரும்பியிருந்தவேளை, தீராத நோயினாற் பீடிக்கப்பட்டு ஒரு காலை இழக்கவேண்டி நேரிட்டது. அந்த நிலையிலுங்கூட மனம் தளராது துணிவுடன் செயற்பட்டு, அன்பர்கள் - அடியவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்று இராஜகோபுரம் அமைக்க ஆரம்பித்த பெருமைக்குரியவர்.
 
 குரும்பசிட்டி வள்ளல், பரோபகாரி, தமிழ்த்தொண்டராம் ஈழகேசரி பொன்னையா அவர்களைத் தந்தைவழி மாமனாராகப் பெற்ற பாக்கியமுடைய செல்லத்துரை அவர்களும் மாமன் வழியொழுகத் தலைப்பட்டார். கிராம விழிப்புணர்ச்சி கருதி பொன்னையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சன்மார்க்க சபையானது, சமயம்- கல்வி– கலை- கலாச்சாரம்- கிராமசேவை போன்றவற்றில் அரிய சாதனைகளைச் செய்து பொன்விழாக்கண்டது. அச்சபை நடவடிக்கைகளில் ஆரம்பம் முதலே தொண்டராகப் பணிபுரிந்து, பின் பொறுப்பான தனாதிகாரி– உப தலைவர் பதவிகளை வகித்து அரும்பணியாற்றினார். தம் வாழ்நாளிலேயே பெரிய தெரு– தபாற்கந்தோர்- மத்திய கல்லூரி– வைத்தியசாலை– மின்சார வசதி– நூல் நிலையம்- வாசிக சாலை– விளையாட்டு மைதானம் என ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படுதலைக் கண்டு குதூகலித்தார். உயர் நோக்கங்களைக் கொண்ட இப் பெரிய மனிதருக்கு விதானையார் பதவி, கிராம சேவையாளர் பதவிகள் கிடைத்தமை சாலப் பொருத்தமே. அப்பதவிகளை மிகத் திறம்பட வகித்துச் சேவை புரிந்து காட்டிய வீர புரு~ர் க. செல்லத்துரை அவர்கள். 
 
 இளைஞர்களுக்கான முதலாவது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு, தனது மனைவிக்குச் சொந்தமான ‘கொக்கன்’ நிலத்திலிருந்து பதினைந்து பரப்புக் காணியை மிக மலிவான விலைக்குக் கொடுத்துதவினார். குரும்பசிட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது, கமக்காரர் விளைபொருட்களைச் சேமித்து வைக்கக்கூடிய பண்டசாலை அமைக்கத் தீர்மானித்து, இடவசதிகளற்று, ஒழுங்கைகளுக்குள் காணி தேடிக்கொண்டிருந்த நேரம், இவர் ஊரின் பெருமை காக்க பண்டசாலை பகிரங்கத் தெருவில் அமையவேண்டுமென்று குரல் கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது மனைவியின் சகோதரியாகிய திருமதி புவனேஸ்வரி அப்புத்துரைக்கு மாற்றுவசதி செய்துகொடுத்துவிட்டு அவரது ஈழகேசரி பொன்னையா பகிரங்க வீதிக் காணியைப் பெற்றுக்கொடுத்து வெங்காயச் சங்கக் கட்டடம் அமைய மூலகாரணமாக இருந்தது சிலருக்கு மட்டுந்தான் தெரியும். 
 
 இப்பேர்ப்பட்ட அவரது சிறப்பு – புகழை விரும்பாத சிலர் அவரைப்பற்றி விமர்சித்த வேளைகளிலெல்லாம், போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் என்று அதனைப் பொருட்படுத்தாது, தன்கடன் பணி செய்து கிடந்தவர். தெய்வீகப்பணி, சமயப்பணி புரிந்து மன ஆறுதல் அடைந்த பெருந்தகை அவர். தூன் ஈடுபட்ட சகல பணிகளும் சரியாக நிறைவேறி பயன் பல ஏற்பட்டமையைக் கண்டு களித்து இன்புற்று ஆத்ம திருப்தியடைந்தவர் அமரர் செல்லத்துரை அவர்களாவர். 
 
 குரும்பசிட்டி மக்களுக்கெல்லாம் ஒரு சீரிய வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய அன்னாரின் சகல பணிகளுக்கும் உற்ற துணையாகக் கூட இருந்தவர்களுள் முதன்மையானவர்கள் அவர்தம் இல்லாள் அமரத்துவ மாது நாகேஸ்வரி அம்மாளும், சற்புத்திரர் திரு. ஈஸ்வரபாலன் அவர்களுமே. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஊருக்காகத் தன் உடல்- பொருள்- ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்த மேதை, எங்கள் ஒப்பற்ற பண்பாளர் விதானை க. செல்லத்துரை அவர்களாவர். அவரை இன்றும், என்றும் நினைவுகூருவோமாக. 
 
 
 
  ஆக்கம் :- சி.கிருஸ்ணகாந்தன்