Print
Category: கட்டுரை
Hits: 3530

சைவமும் தமிழும் சமாந்தரமாக வளர்ந்த எங்கள் கிராமத்தில் தழிழைக்கற்பித்து மொழியறிவை வளர்தெடுக்கவென்றே பல ஆசிரியர்கள் நிறைந்திருந்த குரும்பசிட்டி மண்ணில் சைவத்தின் தொன்மையை பாதுகாக்கவும், சீரிய பண்புகளை வளர்க்கவும், நன்நெறிகளைபோதிக்கவும் ஆலயங்கள் ஆற்றிய பணி போற்றுதற்கரியது.

பல சைவ ஆலயங்களைக் கொண்ட கிராமமாகத் திகழ்ந்த எங்கள் கிராமத்தின் இரு கண்களாக காட்சிதந்த ஆலயங்கள் அன்னை முத்துமாரியப்பாளும், சித்திவிநாயப்பெருமானும் என்பது எல்லோரும் அறிந்ததே. 

தோன்றிய வரலாறே சரியாகக்கூற முடியாத அளவுக்கு பழமை வாய்ந்த அன்னை முத்துமரியம்பாளின் ஆலயம் (அயல் ஊரவர்கள் கொண்டுவந்த நெல் மூடைக்குள் கண்ட அம்பாளின் திருவுரும் வைத்து வழிபட்ட இடமாக அம்பாளின் சந்நிதானம் தோற்றம் கண்டதாக செவிவழிக் கதை ஒன்று உண்டு) எம்மவர்களின் அயராத முயற்சியால் அழகிய தோற்றம் கண்டு அயல் கிராமத்தவர்களும் வணங்கும், வற்றாத அருள் சுரக்கும் தெய்வீகத் தன்மை தேவவஸ்த்தனமாக எங்கள் ஊரில் விழங்கிய ஒன்றாகும். ஆலயங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் போது அவற்றை நெறிப்படுத்திய சிற்பிகளையும் நினைவில் நிறுத்துவது அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். அம்பாளின் சன்நிதானத்தைக் குறிப்பிடும் போது அதில் இருந்து பிரித்தெடுக்க முடியாத அதன் அறங்காவலரான காலஞ்சென்ற திரு.செல்லத்துரை அவர்களையும் குறிப்பிட வேண்டும். பெரும் செல்வந்தராக இல்லாது ஒரு கிராமசேவகராக பதவியில் இருந்து கொண்டு பெரும் ஆலயத்தை நிர்வகித்த பெரியவர். கையில் சிறு தொகை பணம் இன்றி பெரும் திருப்பணியை நிறைவேற்றலாம் என்பதை நிஜத்தில் காட்டிய நம்பிக்கை கொண்ட மனிதர். நோயினால் ஆட்கொள்ளப்பட்டு சக்கர நாற்காலியில் ஊர்ந்து சென்று ஆலயத்தை பராமரிக்க ஆலய மடத்தையே தன் வதிவிடமாக்கிக் கொண்ட அற்புதமான மனிதர். ஊளித் தாண்டவம் எங்கள் ஊரில் அரங்கேறுமுன் அம்பாளின் பாதத்தில் சரனடைந்த இம் மனிதரின் சுவாசக்காற்று அம்பாளின் ஆலய வளாகத்தில் வீசும் காற்றோடு என்றும் கலந்தே இருக்கும். அம்பாளின் சந்நிதானம் மண்ணேடு மண்ணான சோகத்தைக்காணது இயற்கை எய்திய முகாமையாளர் செல்லத்துரை அவர்கள் கொடுத்து வைதத்தவர் என்றேகூற வேண்டும். 

முற்றாக அழிக்கப்பட்ட அம்பாளின் சந்நிதானத்திற்கு அருகே புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாளின் விக்கிரகம் சிறிய ஒரு மண்டபத்தில் பூசிக்கப்பட்ட பின் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் பின் 21 வருடங்கள் கழிந்து மரங்களின் கீழ் கண்டெடுக்கப்பட்டு தற்போதும் தற்காலிக மண்டபம் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகின்றது. எங்கள் (ஊரின்) கண்களில் ஒன்றாக காத்து வந்த அருள் சுரக்கும் முத்துமாரியம்மன் ஆலயம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று, அம்பாளின் மணியோசை கேட்டு அதிகாலை துயில் எழும்பும் நேரம் எங்கள் ஊரில் மிக விரைவில் வரவேண்டும். இருண்டு போன காலமான 21 வருடங்களையும் கனவாக நினைத்து இழந்து போனவற்றை மீளப்புனரமைக்க எல்லோரும் ஆக்கபூர்வமாக உழைக்கவேண்டும்.

இதே போன்றே மற்றைய கண்ணாக சித்திவிநாயர் ஆலயம் அம்பாளின் கோவில் அருகே பல ஆண்டுகளின் முன் எங்கள் ஊரின் சைவசமயம் வளர சேவையாற்றிய சின்னச் சட்டம்பியாரின் அயராத முயற்சியால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயமாகும், எந்த அதிர்வுக்கும் ஆட்டம் காணதவர் விநயாகப்பெருமான் என்பதற்கு சான்றாகவே இந்த ஆலயத்தின் கற்சுவர்களும், பிரமாண்டமான தூண்களும் இன்றுவரை காட்சி கொடுக்கின்றன, தென் இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்டு பிரதிட்டை செய்யப் பட்ட மூலமூர்த்தியாகிய விநாயப்பெருமானின் திருவுருவமும், ஆலயத்திற்கு அழகு சேர்த்த அகன்ற கொடிமரமும் தென்னிந்திய சிற்பங்களை எங்கள் ஊரில் தரிசிக்க குரும்பசிட்டியர்களுக்கு தெண்டாற்றிய முன்னைய பெருமகனார்களை நாம் நன்றியுடன் நினைவில்க்கொள்ள வேண்டும். அவர்கள் வழியில் தோன்றிய மாப்பாணர் இளையதம்பி அவர்களின் பராபரிப்பில் விநாயப்பொருமானின் ஆலயம் எமது ஊர் விநாயப் பொருமானின் அடியவர்களின் வற்றாத பங்களிப்பால் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வந்தவேளையில் 21 வருடமாக இருள் எங்கள் கிராமத்தை சூழ்ந்து கொண்டது. பெரும் அவலங்களின் பின் இன்று இவ் ஆலயமானது, இடிந்த கூரைகளும் சிதைந்து போன மண்டபங்களும், உடைந்து போன விநாயகரின் திரு உருவமுமாக எங்கள் ஊருக்கு நடந்த அவலங்களின் அடையாளமாக காட்சி கொடுக்கின்றது. 

அம்பாளுக்கும் விநாயருக்கும் பொங்கியே நாங்கள் சிறுபகுதியைக் கேட்டோம், தெய்வத்தின் கருணையால் இன்று பெரும் பிரதேசம் கிடைத்திருக்கின்றது. எல்லைகள் அகன்று எல்லோரும் ஆலய வளாகத்திற்கு பிரவேசம் செய்யும் நிலை இன்று வந்திருப்பது குரும்பசிட்டிக்கு ஏற்பட்ட சாபம் நிறைவுற்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது. 

கண்கள் இருண்டால் எந்தக் காட்சியையும் காணமுடியாது. பார்வை தூர்ந்து போவதை நாம் பார்த்துக் கொண்டிருப்போமா? நாங்கள் எமது கண்களாகக் காத்து வந்த இவ் ஆலயங்களில் மீண்டும், எங்கள் குல தெய்வங்களுக்கு ஒளி ஏற்றி, தெய்வீக தரிசனத்தை எங்கள் கண்களால் காணும்போதே எங்களுக்கும், எங்கள் குரும்பசிட்டி கிராமத்திற்கும் மீண்டும் ஒளி பிறக்கும். மூடப்பட்டிருக்கும் மிகுதி நிலமும் எங்கள் மக்களுக்குத் திறக்கபடும். 

மீண்டும் எங்கள் மண்ணில் கால் பதிப்போம் என எண்ணியாரும் இருந்தோமா? மனிதன் ஒன்று நினைத்தால் தெய்வம் நினைப்பது வேறு. அதுவே நியதி என்பதை இன்று கண்முன்னே காண்கின்றோம். ஆகவே இந்தத்தெய்வீகத் திருப்பணிக்கு குரும்பசிட்டியர்களகிய நாம் எல்லோரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். எங்கள் கண்களால் மீதியன எங்கள் மண்ணையும் பார்க்க வேண்டும்.

அறம்காக்கும் போதனையை இவ் ஆலயங்களில் பெரியவர்களிடம் பெற்றதானால் தான் மனிதநேயம் காக்கும் காவலர்களாக எம்மவர்கள் நல்ல மனிதர்களாக உலகெங்கும் வாழ்கின்றார்கள். எங்கள் சந்ததியும் இதையே தொடர நல்ல உதாரணமாக நாங்கள் நடந்து காட்டுவோமாக- ஆக்கம் - புலந்திரன் மகேசன்-