Print
Category: கட்டுரை
Hits: 1770

ஈழகேசரி

அடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே நோக்கமாக வைத்து இலங்கை பத்திரிகை வரலாற்றில் சுதந்திரமான ஒரு தமிழ் பத்திரிகையாக வெளிவந்தது இதுவே முதன்முறை என்ற பெருமையை தன்வசப்படுத்தியது ஈழகேசரி பத்திரிகை.


..."
மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்."
எனக் கூறி மதிப்பிற்குரிய குரும்பசிட்டி நா. பொன்னையா அவர்கள் ஈழகேசரி வார இதழை ஆரம்பித்து குரும்பசிட்டி மண்ணிற்குப் பெருமை சேர்த்தார்.
1930-1958
ஆண்டு காலம் வரை இப்பத்திரிகை பல செறிந்த விடயங்களையும் சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கி வெளிவந்தது. வெறுமனே கிடைக்கப்பெறும் கட்டுரைகளை வெளியிடாது எழுத்தாசிரியரின் பெரும் பங்கோடு வெளிவரும் பத்திரிகைகளுக்கு முன்மாதிரி ஈழகேசரி.
ஈழகேசரியின் தோற்றப் பின்னணியை திரு சிவத்தம்பி ஐயா அவர்களும், ஈழகேசரி பத்திரிகையின் மொழிநடை சம்பந்தமான பல ஆய்வுகளை பேராசிரியர் சண்முகதாஸ் ஐயா அவர்களும் மேற்கொண்டுள்ளனர். இதை விட இப்பத்திரிகை தொடர்பான விடயங்களையும், வெளியான கட்டுரைகளையும், காரண கர்த்தா நா.பொன்னையா பற்றியுமான பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் ஆவணப்படுத்தப்
பட்டுள்ளன.

வெற்றிமணி , சிவத்தமிழ் பத்திரிகைகள்

வெற்றிமணி பத்திரிகையின் ஸ்தாபகர் திரு சுப்பிரமணியம் அவர்களின் முயற்சிக்கு பன்மடங்கு புத்தொளி தந்து இன்று வரை தொடர்ந்து பத்திரிகை நாடத்தி வருகிறார் அவரது மகன் திரு . சிவகுமார் அவர்கள். 25 வருடங்களாகப் பன்னாட்டுத் தகவல்களை கலைநயத்துடன் வெளியிட்டு சுதந்திரமாக இயங்கி வருகிறது.
அத்தோடு "சிவத்தமிழ்" சஞ்சிகை ஆசிரியரால் வெளியிடப்படும் மற்றுமொரு படைப்பு. ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் பிரதானமாக வெளிவரும் இப்பத்திரிகை மூலம் பாரதி அன்று சொன்ன மொழிக்கு உயிரூட்டுவது போல் நம் தமிழ் வெளியீடுகள் வெளிநாடுகளில் வெளிவருகின்றன.

வெற்றிமணி ( இலங்கை ) , அபிநயா பத்திரிகைகள்

வெற்றிமணி பிரதான பத்திரிகையின் அனுசரணையுடனும் , தன் அயரா உழைப்பினாலும் வெற்றிமணி இலங்கைப் பத்திரிகையையும் , கலைகளிற்கென்று பிரத்தியேகமாக
"
அபிநயா " என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வருகிறார் கலாநிதி வலண்டீனா இளங்கோவன் அவர்கள்.

குரும்பசிட்டி மண்ணில் உதயமாகிய பத்திரிகைகளைத் தவிர , பத்திரிகை என்றதும் நினைவுக்கு வரும் ,வரவேண்டிய முக்கிய இடத்தில் இருப்பவர் உலக ஆவணக் காப்பாளர் திரு. கனகரத்தினம் அவர்கள்.

இணையத்தில் விக்கிபீடியாவில் இடம்பெறுமளவு நம் குரும்பசிட்டிக்கு பெருமை சேரத்த இவர்களது பத்திரிகை சேவையையும் , சமூகத் தொண்டினையும் பல்லூழிக் காலம்  நிலைக்கச் செய்வோம் !!
தமிழறியாது வளர்க்கப்படும் குரும்பசிட்டி விழுதுகளுக்கும்
நம் மண் விதைத்த தமிழ்ப் பற்றினை எடுத்துச் சொல்வோம் !

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தவிர்த்து குரும்பசிட்டியின் பத்திரிகைத் துறை சார்ந்த தகவல்கள் வேறேதும் இருப்பின் அறிந்து திளைப்பதற்கு ஆவலாய் உள்ளோம்.

பேரன்பும் நன்றிகளும்
திவ்யா சுஜேன்
கொழும்பு